அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து மீன்சுருட்டி செல்லும் சாலையில் புதுச்சாவடி பேருந்துநிலையம் அருகே சம்பவத்தன்று இரவு சுமார் 10 மணி அளவில் சாலையோரம் 4 வயது குழந்தை தலையில் அடிபட்டு மயக்கத்தில் இருப்பதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர், அந்த குழந்தையை உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தத் தகவல் ஜெயங்கொண்டம் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் மருத்துவமனைக்கு வந்து குழந்தையைப் பார்த்தனர். குழந்தைக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர்களிடம் கேட்டபோது, குழந்தை யாருடையது என்று தெரியவில்லை, சாலையோரம் அடிபட்ட காயத்துடன் கிடந்ததாகக் கூறி சில இளைஞர்கள் இங்கு கொண்டு வந்துள்ளனர் என்ற தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் குழந்தையைப் படமெடுத்து வாட்ஸ் அப் குழுக்களில் பதிவு செய்து இந்தக் குழந்தையின் பெற்றோர்கள் யார்? குழந்தை தலையில் காயத்துடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளது என்று சிறுவன் படத்துடன் குழுக்களில் பதிவு செய்தனர்.
இதையடுத்து இலையூர் அடுத்துள்ள கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மகாலட்சுமி தம்பதியின் மகன் தான் சாலையோரம் கிடந்துள்ளான். சிறுவன் பெயர் அன்பு அமுதன் என்ற தகவல் கிடைத்தது. வாட்ஸ் அப்பில் தகவல் தெரிந்தவுடன் உடனடியாகச் சிறுவனின் தாயார் மகாலட்சுமி தனது உறவினர்களுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். குழந்தை நினைவு இழந்த நிலையில் இருப்பதைக் கண்டு பதறிய அவர், உடனடியாகக் குழந்தையை மேல்சிகிச்சைக்காக கும்பகோணத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு இரவோடு இரவாக கொண்டுசென்று சேர்த்துள்ளார். அடுத்த நாள் காலையில் சிறுவன் கண்விழித்து பார்த்து தன் தாயிடம் பேசியுள்ளான். குழந்தை உயிர் பிழைத்தது கண்டு தாயும், உறவினர்களும் நிம்மதி அடைந்தனர்.
சிறுவன் அவர்களது ஊரான கண்டியங்கொல்லையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள புதுச்சாவடி பேருந்துநிலையம் அருகே சாலையோரம் காயத்துடன் கிடந்ததற்க்கு என்ன காரணம்? இது எப்படி நடந்தது? என போலீசார் சிறுவனின் உறவினர்களிடம் விசாரித்தார்கள். அப்போது அவர்கள் சிறுவனின் பெற்றோர்களான செல்வம் மகாலட்சுமி தம்பதிகளின் சொந்த ஊர் தேவாமங்கலம், தற்போது உறவினர்கள் ஊரான கண்டியங்கொல்லையில் வசித்து வருகின்றனர். இரவு ஊரில் ஒரு துக்க நிகழ்ச்சி நடந்தது. அப்போது சிறுவனின் தந்தை செல்வம் போதையில் இருந்துள்ளார். அப்போது உறவினர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபம் அடைந்த செல்வம், தனது மகன் அன்பு அமுதனை தனது டூவீலரில் உட்கார வைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான தேவா மங்கலம் செல்வதாகக் கோபத்துடன் கூறிவிட்டு வந்துள்ளார்.
அப்படி வரும்பொழுது புதுப்பேட்டை பஸ் ஸ்டாப் அருகில் போதையின் காரணமாக செல்வத்தின் டூ வீலர் நிலைதடுமாறியுள்ளது. அப்போது குழந்தை கீழே விழுந்துள்ளான். குழந்தை விழுந்ததைக் கூட அறியாமல் போதையின் காரணமாக கொஞ்ச தூரம் சென்று செல்வமும் சாலையோரம் விழுந்துள்ளார். பைக் ஒரு பக்கம், செல்வம் ஒருபக்கம் எனத் தடுமாறி விழுந்து கிடந்துள்ளார். ஊரிலிருந்து செல்வம் கோபத்துடன் கிளம்பியதால் அவரது உறவினர்கள் செல்வத்தைத் தேடி பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் தேடி வருவதற்குள் குழந்தை சாலையோரம் விழுந்து கிடந்ததைத் தற்செயலாகப் பார்த்த அவ்வழியே வந்த இளைஞர்கள் குழந்தையை மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.
செல்வத்தைத் தேடி வந்த உறவினர்கள் செல்வம் தனியாக விழுந்துகிடந்ததைப் பார்த்து அவரை அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். செல்வத்துடன் சென்ற குழந்தை அன்பு அமுதன் என்ன ஆனான் என்று அவரது உறவினர்கள் இரவு முழுவதும் தேடும்போது மருத்துவமனையில் சிறுவன் இருப்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தான் செல்வத்தின் மனைவி மகாலட்சுமி மருத்துவமனைக்குச் சென்று தன் குழந்தையை மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் கொண்டு சென்று காப்பாற்றியுள்ளார் எனத் தெரிய வந்தது.
மது போதையினால் குழந்தை ஒரு பக்கம், தகப்பன் ஒருபக்கம், மனைவி ஒரு பக்கம், உறவினர்கள் ஒருபக்கம் என ஒரு இரவு முழுவதும் மக்களைத் தூங்காமல் பதட்டத்தோடு அலைந்து திரிந்துள்ளனர். எல்லாம் மது என்ற அரக்கன் படுத்திய பாடு என்கிறார்கள் கண்டியல்கொல்லை கிராம மக்கள்.