கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியில் இருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இருப்பினும், அவரது மரணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஆணையம் அமைக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 600 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கையை சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நீதிபதி ஆறுமுகசாமி அளித்தார். ஜெ.வின் மரணம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பும் வகையில் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக வெளிநாடு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்க சசிகலா தடையாக இருந்ததாக கேள்விகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஜெ. சிகிச்சையில் இருந்தபோது அவரை வெளிநாடு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்த மருத்துவர் ரிச்சர்ட் பீலே பேசும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ''லண்டனுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கக்கூடிய தேவை இருக்கிறதா என்று என்னிடம் சசிகலா கேட்டார். கண்டிப்பாக போக வேண்டும் என்று சொன்னதாக நான் நினைக்கிறேன். அந்த சந்திப்பின் ஆரம்பத்தில் சமநிலை இல்லை. பின்னர் ஜெயலலிதாவே தனக்கு லண்டன் போக விருப்பம் இல்லை என சொல்லிவிட்டார்'' என்றார்.