சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி, கூலமேடு பகுதிகளில் பொங்கல் பண்டிகையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டி, சேலம் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் பிரசித்தி பெற்றது.
இந்நிலையில், தம்மம்பட்டியில் உள்ள நாகியம்பட்டியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டில், சனிக்கிழமை (பிப். 22) ஜல்லிக்கட்டு விழா நடந்தது. தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தலைவர் இளங்கோவன், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
தம்மம்பட்டி, உலிபுரம், செந்தாரப்பட்டி ஆகிய உள்மாவட்ட பகுதிகளில் இருந்து மட்டுமின்றி திருச்சி, நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மொத்தம் 700 ஜல்லிக்கட்டுக் காளைகள் களமிறங்கின. 450 மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். முன்னதாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், காளைகளை அடக்க களமிறங்கிய காளையர்களுக்கம் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கு குக்கர் பரிசு வழங்கப்பட்டது. சேலம், ஆத்தூர், தம்மம்பட்டி சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியை ரசித்துப் பார்த்தனர். மாவட்ட காவல்துறை எஸ்பி தீபா கனிகர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.