கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் போட்டிகளை நடத்தும் குழு செய்து வருகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்களுக்கான உடற்தகுதித் தேர்வு, டோக்கன் முன்பதிவு தொடங்கியது. 14 மருத்துவர்களை உள்ளடக்கிய 50 பேர் கொண்ட குழு மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய மூன்று இடங்களில் மாடுபிடி வீரர்களுக்கான முகாம் நடைபெற்று வருகிறது. மாடுபிடி வீரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் முன்பதிவு செய்ய முடியாது; அதேபோல் 300 வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.