Skip to main content

பணி நேரத்தில் போதையில் ஆட்டம் போட்ட சிறை அலுவலர்! -விவகாரத்தில் சிக்கிய விருதுநகர் மாவட்ட சிறை!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
Jailed officer Virudhunagar

 

சிறைகளுக்குள் கரோனா பரவுகிறது என்ற பீதியில் சிறைவாசிகள் பரிதவித்துவரும் நிலையில், விருதுநகர் மாவட்ட சிறையில், பணி நேரத்தில், சிறை கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள சிறை அலுவலர் வடிவேல், மதுபோதையில் கண்டபடி உளறிக்கொண்டு இருந்திருக்கிறார். இந்த விவகாரம், உதவி சிறை அலுவலர் ராம்குமார் மூலம் மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகாராகியுள்ளது. சிறை அலுவலர் வடிவேல், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, A.R. காப்பி பதிவு செய்யப்பட்ட நிலையில், முதல் தகவல் அறிக்கையும்  பதிவாகியுள்ளது.

“உயர் பொறுப்பிலுள்ள நீங்கள் இப்படி குடி போதையில் பணிக்கு வரலாமா?” என்று கேட்டாராம், உதவி சிறை அலுவலர் ராம்குமார். அதற்கு வடிவேல், “நீங்கள் எல்லாம் யோக்கியமா? உன் வேலையைப் பார்..” என்று தகாத வார்த்தையில் பேசினாராம்.

இந்த வழக்கின் பின்னணியில் வேறொரு விவகாரம் இருப்பதாகச் சொல்கிறது விருதுநகர் சிறைத்துறை வட்டாரம். சிறை அலுவலர் வடிவேல் விடுப்பில் இருந்தபோது, சிறைவாசி ஒருவரை தவறுதலாக ‘ரிலீஸ்’ செய்துவிட்டனர். பிணை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, பிணை உத்தரவு என்று தவறுதலாக கருதி, அந்தக் கைதியை விடுவித்துள்ளனர். அதன்பிறகு, வழக்கறிஞர் மூலம் அந்த கைதியை திரும்ப அழைத்துவந்து, செல்லில் அடைத்துள்ளனர். இந்தத் தவறுக்காக, சம்பந்தப்பட்டவர், துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளாகியிருக்கிறார். இந்த எரிச்சலில்தான்,  மதுப்பழக்கம் உள்ள சிறை அலுவலர் வடிவேலுவை, அவர் சிக்க வைத்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவைப் படித்து புரிந்துகொள்ள இயலாத நிலையில்தான் தமிழகத்தில் சிறை அலுவலர்கள் பலரும் உள்ளனர். புழல் சிறை தொடங்கி, விருதுநகர் மாவட்ட சிறை வரை இதே நிலைதான்!

 

சார்ந்த செய்திகள்