சேலத்தில் முன்விரோதம் காரணமாக சில்லி மீன் கடைக்காரரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த ரவுடிகள் நால்வர் ஒரே நாளில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சேலம் அஸ்தம்பட்டி சிஎஸ்ஐ சர்ச் அருகே சில்லி மீன் கடை நடத்தி வந்தவர் வெங்கடேஷ். பிரபல ரவுடி. இவருக்கும் சேலம் அழகாபுரம் பெரிய புதூரை சேர்ந்த அஜித் என்கிற அஜித்குமாருக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. இருவருக்குள்ளும் அடிக்கடி மோதல்களும் நடந்து வந்தன.
இந்நிலையில் அஜித்குமார் தனது கூட்டாளிகளான ராமு, பாரதிராஜா, சசிகுமார் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கூட்டு சேர்ந்து வெங்கடேஷை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். இதையடுத்து அவர்கள் ஐந்து பேரும், கடந்த ஆகஸ்ட் 22, 2018ம் தேதியன்று இரவு சில்லி மீன் கடையில் இருந்த வெங்கடேஷை கத்தி, அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அஸ்தம்பட்டி போலீசார், மேற்சொன்ன ரவுடிகள் அனைவரையும் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர்கள் ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பலர் முன்னிலையில் ஒரு கொலைத் திட்டத்தை நிறைவேற்றிய இந்த கும்பலால் மேலும் பல சட்டவிரோத செயல்கள் நடக்கலாம் என்று காவல்துறை தரப்பு கருதியது.
மேற்குறிப்பிட்ட குற்றவாளிகளில் மணிகண்டன் தவிர மற்ற நால்வர்களான அஜித்குமார், ராமு, பாரதிராஜா, சசிகுமார் ஆகியோர் மீது ஏற்கனவே சில குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவர்கள் நால்வரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க அஸ்தம்பட்டி போலீசார் மற்றும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோர் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து, நான்கு ரவுடிகளையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். அதன்படி, ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு சனிக்கிழமை (செப். 29, 2018) கொடுக்கப்பட்டது. மேலும், அவர்கள் அனைவரும் ஆத்தூர் சிறையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.