டாஸ்மாக் உடன்படிக்கை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், நகரின் போக்குவரத்து, பள்ளிகள், பேக்டரிகள், மற்றும் வெகு ஜனமக்கள் குடியிருப்பு ஆகியவைகளைக் கொண்ட இலவன்குளம் ரோட்டிலுள்ள 10869 எண் டாஸ்மாக் மதுக்கடை இடையூறாக இருப்பதால் அதை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி கடந்த மாதம் அந்தப் பகுதி மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிக்ளும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
அது சமயம் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய டி.எஸ்.பி. ராஜேந்திரன் ஒரு மாதத்திற்குள் மாற்றுவதற்கான ஏற்பாட்டை தொடர்புடைய அதிகாரிகளுடன் பேசிய முடிவு செய்வதாகச் சொன்னதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் வாக்குறுதிப்படி அந்தக்கடை மாற்றப்படாததால் சி.பி.எம். கட்சியும், மக்களும் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்க, இன்று சங்கரன்கோவில் நகர டவுண் காவல் நிலையத்தில் அதற்கான சமாதானக் கூட்டம், நடந்தது. அதில் இன்ஸ்பெக்டர் அருள், டாஸ்மாக் மேலாளர் அய்யப்பன், துணை வட்டாட்சியர் மைதீன்பட்டாணி, கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை மற்றும் சி.பி.எம். சார்பில் வட்டாரச் செயலர் அசோக் மற்றும் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டத்தில் இரண்டு மாத கால அவகாசத்திற்குள் குறிப்பிட்ட அந்த டாஸ்மாக் கடையை மாற்றுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
செய்தி : படங்களும் : ப.இராம்குமார்