திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் தரக்கூடியதாக இருக்கிறது. ஒரு அகில இந்திய கட்சியினுடைய மாவட்ட தலைவர் அவர். 140 கோடி மக்கள் வாழ்கின்ற இந்திய நாட்டில் முப்பது, நாற்பது ஆண்டுகள் நாட்டை ஆண்ட பிரதான கட்சி. இன்று ஆளப்போகிற ஒரு முக்கிய கட்சியினுடைய ஒரு மாவட்ட தலைவர் இறந்துள்ளார். இந்தியா முழுவதும் 550 மாவட்டங்கள் இருக்கும். 150 கோடி மக்கள் வாழும் நாட்டில் 550 பேரில் ஒரு குறிப்பிட்ட தாக்க தலைவர் அவர்.
சந்தேகத்திற்குரிய மரணமாக பத்திரிகைகளில் கொலை என்றும் தற்கொலை என்றும் மாறி மாறி செய்திகள் வருகிறது. இது சம்பந்தமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் கட்சியின் மாவட்டத் தலைவர் என்பது மட்டுமல்ல ஒரு சாதாரண குடிமகனாக இருந்தால் கூட எந்தக் கட்சியைச் சாராதவராக இருந்தாலும் சரி நாங்கள் வருத்தப்படுகிறோம். கட்சிக்காக ரொம்ப பாடுபட்டவர். சிரமப்பட்டு உழைத்தவர். தேர்தல் நேரத்தில் நன்றாக பணியாற்றி இருக்கிறார். பல ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இது எங்களுக்கு கூடுதலாக வருத்தத்தைத் தருகிறது.
இந்த மாதிரி சம்பவம் யாருக்கு நடந்தாலும் இது போன்ற மரணம் உடல் எரிக்கப்பட்டு கொடூரமாக நடந்திருப்பது என்பது கண்டனத்திற்குரியது தண்டனைக்குரியது. சம்பந்தப்பட்ட காவல்துறை ஆறு ஏழு குழுக்களை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை எஸ்.பி அறிவித்துள்ளார். நிச்சியமாக டி.ஐ.ஜி, ஐ.ஜி, டி.ஜி.பி, ஹோம் செக்ரட்ரி, முதலமைச்சர் என எல்லோரின் கவனத்திற்கும் சென்றிருக்கும். எனவே இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொறுப்பில் உள்ள அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.