Skip to main content

2 மணி நேரத்தில் முடிந்துவிட்டது: பொங்கல் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு

Published on 16/09/2017 | Edited on 16/09/2017
2 மணி நேரத்தில் முடிந்துவிட்டது: பொங்கல் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு


பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 12 ஆம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய 2 மணி நேரத்தில் முடிந்துவிட்டது.

2018 ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி சென்னையில் தங்கியிருக்கும் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதற்காக ரயில்வே சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 120 நாட்களுக்கு முன்பாகவே பயணச் சீட்டு முன்பதிவு செய்து கொள்ளும் திட்டம் நடைமுறையில் உள்ளதால் , ஜனவரி 12 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கு வெள்ளிக்கிழமை (செப். 15) முதல் முன்பதிவு செய்யலாம் என்று ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இணையதளத்தில் எளிதாக பயணச்சீட்டு செய்யும் வசதி இருந்தாலும் சென்னை எழும்பூர், சென்ட்ரல் ஆகிய ரயில் நிலைய கவுன்ட்டர்களில் ஏராளமான மக்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே காத்திருந்து பயணச்சீட்டை முன்பதிவு செய்தனர். பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கவுன்ட்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜிஎஸ்டியால் டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 2 மணி நேரம்: ஜனவரி 12 ஆம் தேதி பயணத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு காலை 10 மணிக்குள்ளாகவே முடிந்துவிட்டது. இப்போது தென் மாவட்ட ரயில்களில் தோராயமாக படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு 235 என்ற அளவில் காத்திருப்பு பட்டியல் உள்ளது. மேலும் கோவை வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களிலும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு காத்திருப்பு பட்டியல் 150, என்ற அளவில் உள்ளது.

குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், நெல்லை, முத்துநகர், அனந்தபுரி, பொதிகை, கன்னியாகுமரி விரைவு ரயில்களில் காத்திருப்பு பட்டியல் 250,ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அதேபோல கோவை வழியாகச் செல்லும் நீலகிரி, சேரன், ஏற்காடு, கோவை இன்டர்சிட்டி ரயில்களிலும் இதே நிலைதான் உள்ளது. மேலும், ஜனவரி 13 ஆம் தேதி பயணம் மேற்கொள்பவர்கள் சனிக்கிழமை (செப். 16) முன்பதிவு செய்யலாம் என்றும், பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான முன்பதிவு செப்18 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்