மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தற்பொழுது நிறைவடைந்தது. இன்று காலை முதல் தொடங்கிய ஜல்லிக்கட்டானது விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 28 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் விஜய் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார். ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த விஜய் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே அதிக காளைகளை பிடித்தவர் என்ற சாதனையை விஜய் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் 17 காளைகள் பிடித்து தொடர்ந்து இரண்டாம் பரிசை வென்றார். மதுரை விளாங்குடியை சேர்ந்த மாடுபிடி வீரர் பாலாஜி 14 காளைகளைப் பிடித்து மூன்றாவது பரிசை பெற்றார்.
நிகழ்வின் முடிவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி பேசுகையில், ''தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டான ஜல்லிக்கட்டு முதலாம்நாள் அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் நடத்த சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் செய்திருக்கிறது.
இன்று மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை, கால்நடைத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை என அனைத்து அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு எப்போதையும் விட முதல்நாள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு என்பது மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. முறையாக வீரர்களையும், காளைகளையும் தேர்வு செய்து அதற்கான பரிசுகளை முதல்வர் பெயரில் வங்கியிருக்கிறோம். முதல்வீரருக்கு காரும், சிறந்த காளைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சார்பில் மற்றும் தொழில் நிறுவனங்கள் சார்பிலும் போட்டிகளும் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு நிகழ்வு சிறப்பாக நடந்திருக்கிறது'' என்றார்.