நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி இருந்தது. இதில் சில புத்தகங்கள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக இணை அமைச்சர் எல்.முருகனிடம் செய்தியாளர்கள் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீட்டில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ''இது ஒரு மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம். தேசத்திற்கு எதிரான செயல்களில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை இது காட்டிக் கொண்டிருக்கிறது. தமிழக காவல்துறை கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. என்.ஐ.ஏ அவர்களைத் தொடர்ந்து செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்த பிறகு அவர்கள் நாட்டிற்கு எதிராக செயல்கள் செய்தது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு நாம் தமிழர் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை செய்திருக்கிறார்கள். அவர்களை கைது செய்ய இருக்கிறார்கள். என்.ஐ.ஏ தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள். நாட்டுக்கு எதிராக யார் யார் செயல்படுகிறார்களோ அவர்களை கண்காணிக்கின்ற அமைப்பு. அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது நாம் தமிழர் கட்சி தேசத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது'' என்றார்.