திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருள்நீக்கி ஊராட்சி மன்றத்தலைவராக இருந்துவருபவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த செங்கொடி குமாரராஜா. இவர் ஊராட்சியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி என பல்வேறு அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்காகவும், பொது சுகாதாரத்தைப் பேணி பாதுகாத்திடவும் தொடர்ந்து அரசிடம் முறையிட்டுத் தேவையான திட்டங்களைப் பெற்று செயல்படுத்தியும் வருகிறார்.
அந்த வகையில், இருள்நீக்கி ஊராட்சியில் சுமார் 15க்கும் மேற்பட்ட ஊராட்சிக்கு சொந்தமான குளங்கள் இருக்கின்றன. அந்தக் குளங்களில் பெரும்பான்மையான குளங்கள் ஏலம் விடப்பட்டு, அதிலிருந்து கிடைக்கப்பெற்ற வருவாயில் ஊராட்சியின் வளர்ச்சிக்காக பயன்படுத்திவருகிறார். இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம். இந்தநிலையில், ஊராட்சிக்கு சொந்தமான மேலும் 5 குளங்களை ஏலம்விட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிபெற்று நேற்று (18.10.2021) ஏலம் விட அறிவிப்பு வெளியாகியிருந்தது.
ஆனால், இருள்நீக்கி கிராமத்தைச் சேர்ந்த சிலர் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அரசு அதிகாரிகளின் துணையோடு குளத்தை ஏலம்விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மேலும், கோட்டூர் வட்டார ஊராட்சி அலுவலரான சாந்தி உத்தரவின் பேரில் இன்று நடைபெற இருந்த குளம் ஏலம் நிறுத்தப்படுவதாக ஊராட்சி மன்ற அலுவலகத்தின் தகவல் பலகையில் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நோட்டீஸையும் ஒட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். அங்கு கூடியிருந்த இருள்நீக்கி கிராம மக்கள் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டு அதிருப்தியடைந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்விட்டு, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அரசு அதிகாரிகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து இருள்நீக்கி ஊராட்சி மன்றத் தலைவரான செங்கொடி குமாரராஜா கூறுகையில், "பாப்பாபட்டி, கீரிபட்டி, நாட்டார்மங்கலம் போன்ற ஊராட்சிகளில் பட்டியல் சமூகத்து மக்கள் தேர்தலில் போட்டியிட முடியாத வன்கொடுமையான நிலையைக் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் திராவிடமும் கம்யூனிசமும் இருகுழல் துப்பாக்கியாக இருந்து போராடிய திருவாரூர் மாவட்டத்தில் பட்டியல் சமூக மக்களான நாங்கள் போட்டியிட்டு வெற்றிபெற்றுவிடுகிறோம்.
ஆனால் செயல்படவிடாமல் ஆதிக்க சமூகத்தினர் பல நெருக்கடிகளைக் கொடுப்பது பல இடங்களிலும் நடக்கிறது. எங்க ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான குளத்தை ஏலம் விடாதபடி ஒரு தரப்பினருக்கு ஆதரவாக அதிகாரிகளே நிற்கிறாங்க. ஊராட்சி நிர்வாகத்தை செயல்படவிடாமல் முடக்குறாங்க. அதிகாரிகளே சாதிய வன்கொடுமையோடு செயல்படுவது வேதனை அளிக்கிறது. இதனால் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை நாளை (19ஆம் தேதி) ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப் போகிறேன். பஞ்சாயத் ராஜ் சட்டத்தின்படி ஊராட்சி மன்றத் தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டப்போதிலும் தமிழகத்தில் சாதியின் பெயரால் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரத்தில் ஊரில் உள்ள ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் தலையிடுவது வேதனை அளிக்கிறது. அரசு அதிகாரிகளே அரசுக்கு சொந்தமான குளத்தைத் தனியாருக்கு சொந்தமானது என கூறி ஊராட்சி நிர்வாகத்தை முடக்க நினைப்பது வியப்பாக இருக்கிறது. பிரச்சனையை மக்களிடம் ஒப்படைத்துவிட்டேன். எனது பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன்" என்கிறார் ஆதங்கமாக.
இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏதும் வந்திடாமல் தடுக்கும் விதமாக போலீசார் அங்கு குழுமியிருந்தனர்.