வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்துவருகிறது. கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகளும், வயல்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த நவம்பர் மாத துவக்கத்தில் பெய்த கனமழையினால், ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசு அமைச்சர்கள் குழு அமைத்தது. மேலும், மத்திய குழுவும் தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டுச் சென்றது. அதேவேளையில், தமிழ்நாடு அரசு பாதிப்புக்குள்ளான விளைநிலங்களுக்கு நிவாரணத் தொகையை அறிவித்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரண தொகை போதமானதல்ல; தற்போது கூடுதல் மழை பெய்து சேதங்கள் அதிகமாகியுள்ளன. அதனால், கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்குத் தமிழக அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல என்று உழவர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் கூடுதல் பரப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஏற்கனவே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிய உழவர்களுக்கு இது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத கனமழையை எதிர்கொண்டுவருகின்றன. சென்னையிலும், கடலூர் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் நவம்பர் மாதத்தில் மட்டும் 1000 மில்லி மீட்டருக்கும் கூடுதலான மழை பொழிந்துள்ளது. காவிரி டெல்டாவிலும் பருவ மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த 15ஆம் தேதிவரை பெய்த மழையில் மட்டும் காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 68,000 ஹெக்டேர் பரப்பளவில், அதாவது 1.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சேதமடைந்ததாக அப்பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் குழு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கை அளித்திருந்தது.
பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடும் வழங்கப்படாத நிலையில், கடந்த ஒருவாரமாக பெய்துவரும் மழையில் இன்னும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களில் தொடங்கி கடலூர், விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களிலும் பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன.
கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியதால் திறந்துவிடப்பட்ட தண்ணீரும், நீர்நிலைகளின் கரைகள் உடைந்ததால் பெருக்கெடுத்த தண்ணீரும் பயிர்களை மூழ்கடித்துவிட்டன. இம்மாதத் தொடக்கத்தில் பெய்த மழையில் ஓரளவு பாதிக்கப்பட்டு, காப்பாற்றிவிட முடியும் என்ற நிலையில் இருந்த பயிர்களும் கூட இப்போது பெய்த மழையில் முற்றிலுமாக அழுகி சேதமடைந்துவிட்டன. இடைப்பட்ட காலத்தில் புதிதாக பயிரிடப்பட்ட சம்பா பயிர்களும் கூட வெள்ள நீரில் மூழ்கிவிட்டன. அந்தப் பயிர்களை இனி காப்பாற்ற முடியாது என்பதால் உழவர்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.
தமிழ்நாட்டிலுள்ள உழவர்களால் முதன்மையாக சாகுபடி செய்யப்படும் பருவம் சம்பா பருவம்தான். கடந்த ஆண்டு பருவம் தவறி ஜனவரி மாதம்வரை பெய்த மழையால் சம்பா நெற்பயிர்களும், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஓரளவு இழப்பீடு வழங்கப்பட்ட போதிலும் அது உழவர்களின் பாதிப்பை முழுமையாக போக்கவில்லை. நடப்பு சம்பா பருவ நெற்பயிர்களை வெற்றிகரமாக அறுவடை செய்தால்தான் கடந்த ஆண்டு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியும் என்று உழவர்கள் நம்பிக்கொண்டிருந்த வேளையில் அடுத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு மீண்டும் ஆய்வும், கணக்கெடுப்பும் மேற்கொள்ள வேண்டும். அதன்படி எவ்வளவு ஏக்கரில் நெற்பயிர்களும், பிற பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைத் தீர்மானித்து உழவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அதேபோல், சேதமடைந்த நெற்பயிர்கள் அறுவடை செய்யும் நிலையில் இருந்தால் அவற்றுக்கு ஏக்கருக்கு ரூ. 8000 இழப்பீடும், சம்பா பயிர்களை மறுநடவு செய்வதற்காக ரூ. 2415 மதிப்புள்ள விதை மற்றும் உரங்களும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது போதுமானதல்ல. நெல் சாகுபடிக்கான செலவுகள் கணிசமாக அதிகரித்துவிட்ட நிலையில், அதற்கேற்ற அளவில் இழப்பீடு உயர்த்தி வழங்கப்படுவதுதான் நியாயமானதாக இருக்கும். எனவே, மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.