நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''விளையாட்டு துறை அமைச்சர் இன்னும் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். அதற்கு மேல் வளர மாட்டேன் என்கிறார். தர்மபுரியில் வந்து பேசிவிட்டு போகிறார். என்னுடைய தந்தை முதலமைச்சர் உறுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க சட்ட போராட்டம் நடத்துவார் என்று சொல்லியுள்ளார். உங்களுக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. முதலமைச்சர் எதுக்கைய்யா சட்ட போராட்டம் நடத்த வேண்டும். கையெழுத்து போட வேண்டும் அவ்வளவு தானே.
கையெழுத்து போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒரு மிகப்பெரிய தீர்ப்பை கொடுத்திருந்தார்கள். அந்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது. தரவுகளை சேகரித்து நீங்கள் அதை நியாயப்படுத்தி உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்பிறகு என்ன உங்களுக்கு சட்ட போராட்டம் இருக்கிறது. தரவுகள் எங்கே இருக்கிறது? தரவுகள் கம்ப்யூட்டரில் இருக்கிறது. கம்ப்யூட்டரில் டவுன்லோட் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மணி நேரமாகும். நான் முதலமைச்சராக இருந்தேன் என்றால் ஒரு மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிடுவேன். தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்களை பற்றி ஞாபகம் வரும்; தேர்தல் வந்தால் மட்டும் தலித்துகளை பற்றி ஞாபகம் வரும். மாமன்னன் படத்தில் நடித்தால் போதுமா? பட்டியலின மக்களுக்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டாமா? தெரிந்தால் தானே மரியாதை கொடுப்பீர்கள். இது சினிமா அல்ல இது வாழ்க்கை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழ்நாட்டிலேயே அதிகமாக செய்த கட்சி பாமக தான்'' என்றார்.