தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு நல ஆணையத்தின் திருச்சி மாவட்ட மறு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் ராமராஜ், முரளிகுமார், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், திருச்சி காவல்துறை துணை ஆணையர் சக்திவேல், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அனிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சரஸ்வதி ரெங்கசாமி, “மாவட்ட வாரியாக குழந்தைகள் பாதிக்கப்படாத வகையில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (08.07.2021) நடைபெற்றது. மூன்றாவது கரோனோ பரவலில் குழந்தைகள் பாதிக்காத வண்ணம் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 20 மாவட்டங்களில் குழந்தை இல்லங்களை ஆய்வு மேற்கொண்டு அதற்குரிய நடவடிக்கை எடுத்துவருகிறோம். 100க்கு மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரோனாவினால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 93 பேர், யாராவது ஒருவரை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3,593 பேர். மேலும், கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அனுமதியின்றி நடத்தப்பட்டுவரும் குழந்தைகள் காப்பகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார். தொடர்ந்து செய்தியாளருக்குப் பேட்டி அளித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, “3வது கரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வகையில் திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கென 100 படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வைத்துள்ளோம். குழந்தைகளுக்கான தனிப்பிரிவு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளோம்” என தெரிவித்தார்.