சிதம்பரத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சிவக்கம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பங்குபெற்ற மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் முகாமில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம் மற்றும் கண்நோய் குறைபாடு உள்ளவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் தற்போது வைரஸ் குறித்து பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பிடத்தை வைத்துக்கொண்டு கைகளை நன்கு கழுவி உணவுகளை உண்ண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதேபோல் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 2 இடத்தில் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. டில்லி கலவரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ஐந்து நாட்கள் தொடர்ந்து குரல் கொடுத்த காங்கிரஸ் கட்சி எம்.பி களை இடைநீக்கம் செய்து உள்ளனர். அவர்களை வரும் 11ம் தேதி கூடும் கூட்டத் தொடருக்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தை உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு விசாரணையை நடத்தவேண்டும். தமிழக சட்டசபையில் நடந்துகொண்டிருக்கிறது அதில் குடியுரிமைச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றவேண்டும், கேரளா, புதுவை, மேற்குவங்க முதல்வர்கள் போல் தமிழக முதல்வர் செயல்பட வேண்டும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபி, அதிமுக அணி தொடர்ந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியே ஏற்படும். டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்ததை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு ரசாயனத்தை எடுக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்வது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. முதல்வர் நாற்று நடுவது, கதிர் அறுப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் அவர் விவசாயிகளுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இல்லை.
தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் எடுப்பது ஆபத்தானது., அபத்தமானது. ஒரே தேசம், ஒரே மொழி என்ற கலாச்சாரத்தை நுழைக்கவே முயற்சி செய்கிறார்கள். இதற்கு தமிழக அரசு மௌனம் சாதிக்காமல் அனுமதி இல்லை என அறிவிக்கவேண்டும்.
சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்தது மட்டுமல்லாமல் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் கடலூரில் அடிக்கல் நாட்டிய மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை பெயர் மாற்றம் செய்யக்கூடாது என கூறினார். இந்நிகழ்ச்சியில் உசுப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் தென்றல்மணி இளமுருகு, கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கீதா, சிவக்கம் வட்டார மருத்துவ அலுவலர் குணபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் பால அறவாழி, மாநில நிர்வாகி தாமரைச்செல்வன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.