திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தொடர்பான விவகாரத்தில் வதந்தி பரப்பியவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் நலத்துறை செயலாளர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் குழு சென்னை வந்துள்ளது. இந்த குழு ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் தலைமையிலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டுக்கே எதிரானவர்கள். வதந்தி பரப்புவோர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள். புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து சிலர் கீழ்த்தரமாக அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதை தமிழர்களை விட புலம்பெயர் தொழிலாளர்கள் அழுத்தமாகச் சொல்வார்கள். புலம்பெயர் தொழிலாளர்கள், தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். யாரேனும் அச்சுறுத்தினால் காவல்துறை உதவி எண்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் தகவல் தெரிவிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் திமுக அரசும் தமிழ்நாட்டு மக்களும் அரணாக இருப்பார்கள். சமூக ஊடகங்களை; வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.