
கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையை அடுத்துள்ள மு. அகரம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இருளர்கள் 13 பேர் வேப்பூர் அருகே ராயபுரம் பகுதியில் உள்ள பால் பண்ணைகளில் கொத்தடிமைகளாகப் பணியாற்றியுள்ளனர்.
இருளர்களான கன்னியம்மாள், அவரது உறவினர்கள் 13 பேர் ஆகியோர் பால்பண்ணை உரிமையாளர்களிடம் ரூபாய் 50,000 முன்பணம் வாங்கிக்கொண்டு பால் பண்ணைக்கு வேலைக்குச் சென்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பண்ணையில் வேலை செய்துவந்தனர். அவர்களுக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பண்ணையில் வேலை பார்த்த 6 பேர் உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றுவருவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பி வந்தனர். பின்னர் அவர்கள் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த கல்யாணியை சந்தித்து, தாங்கள் இருளர்கள் என்பதால் எங்களுக்கு ஊதியம் வழங்காமல் கொத்தடிமை போன்று அதிக வேலை வாங்கிவருவதாகக் கூறினர்.

அதனைத் தொடர்ந்து இருளர் பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாபு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் திருமேனி, புதுச்சேரி காளிதாஸ் மற்றும் இருளர்கள் 6 பேரும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (14.12.2021) மனு அளித்தனர். மனுவில் தங்களுடன் பணியாற்றிய 7 பேர் கொத்தடிமைகளாக பால் பண்ணையில் வைத்திருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட இருளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்து பால்பண்ணையில் உள்ளவர்களை விரைவில் மீட்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதையடுத்து விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார் நேற்று மாலை ராயர்பாளையம் கிராமத்தில் உள்ள சிவா என்பவருக்கு சொந்தமான பால் பண்ணையில் வேப்பூர் வட்டாட்சியர் செல்வமணி, துணை வட்டாட்சியர் மஞ்சுளா ஆகியோருடன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு கொத்தடிமைகளாக இருந்த சின்னராசு (20), சக்திவேல் (19), 18, 7, 11 ஆகிய வயதுகளில் சிறுவர் சிறுமியர், பாக்கியராஜ் (35) மற்றும் மூன்று வயதில் ஒரு குழந்தை என மொத்தம் ஏழு பேரை மீட்டனர்.