காஸா கிராண்ட் நிறுவனங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கியதில் தொடர்புடைய அதிகாரிகள் அதற்கான தகுந்த விளக்கங்களுடன் தனித்தனியாக பிரமானப்பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் குமுதா என்பவர் தாக்கல் செய்த மனுவில், அனகாபுத்தூர் மூகாம்பிகை நகரில் பல ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் கட்டி வசித்தவர்களை போலீஸ் துணையுடன் வெளியேற்றியதை ரத்து செய்ய கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, ’’சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்துக்கு அருகில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து காஸா கிராண்ட் என்ற கட்டுமான நிறுவனம் 26 குடியிருப்புகள் அடங்கிய 16 மாடி கட்டடம் கட்டப்படுவது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட புகைப்படங்களைப் பார்த்த நீதிபதிகள், மௌலிவாக்கம் சம்பவத்தில் இருந்து அதிகாரிகள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டி, அனுமதி அளித்த அதிகாரி ஆஜராக உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று, நீர்வள ஆதாரத் துறை தலைமை பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற பக்தவச்சலம் நீதிபதி முன்னால் ஆஜரானார். அப்போது நீதிபதிகள், வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள இடத்தில் எப்படி 11 மாடி கட்டிடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிகாரி, 6 அடி அளவில் கட்டுமான நிறுவனம் சுவர் எழுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த பதிலை கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தெற்கு கரையை உயர்த்தினால் வடக்கு கரைப்பக்கம் தானே தண்ணீர் ஏறும் என கேள்வி எழுப்பியதுடன், கரையில் எப்படி கட்டுமானத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சைதாப்பேட்டை பகுதியில் அடையாற்றில் கரையே இல்லை என தாசில்தார் அளித்த பதிலால் அதிர்ந்த நீதிபதிகள், கரையே இல்லாத ஆறா? என ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
2015ல் 10 நாள் இடைவெளியில் காஸா கிராண்ட் நிறுவனம் பல அனுமதி வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்ததால், அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் தனித்தனியாக பிரமானபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஜூலை 24க்கு ஒத்திவைத்தனர்.