Skip to main content

காவிரி உரிமை போராட்டத்தை ஐ.பி.எல். போட்டி திசைதிருப்பி விடக்கூடாது: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

Published on 04/04/2018 | Edited on 04/04/2018
ipl



உடனடியாக IPL போட்டிகளை இப்போது நடத்த முடியாது என்று தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் நடக்கின்ற காவிரி உரிமை போராட்டத்தை IPL போட்டி திசைதிருப்பி விடக்கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூறியுள்ளது. 
 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று ஆளுங்கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளுமே தமிழகத்தில் தெருவில் இறங்கி போராடி வருகிறோம். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல், இரயில் மறியல், விமானநிலைய முற்றுகை, கடையடைப்பு போன்ற பல வகையான போராட்டங்களை தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இந்த தொடர் போராட்டங்கள் நிற்காது என்பது கடந்த ஒரு வாரகாலமாக தமிழகத்தில் நிலவுகின்ற சூழ்நிலை. தமிழக இளைஞர்களை பொறுத்தவரை எப்படி தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது என்று குமுறிக் கொண்டு இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல மெரினாவில் போராட்டத்தை தொடங்கி தமிழகம் பூராவும் நடத்தலாம் என்றால் தமிழக காவல்துறை தடுத்து நிறுத்துகிறது. ஆனால் இளைஞர்களும், மாணவர்களும் களமிறங்கினால் தான் மத்திய அரசு பயப்படும் என்ற சூழ்நிலை நிலவுகிறது. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நடக்கப்போகின்ற IPL போட்டி கிரிக்கெட் மைதானத்தை பயன்படுத்தி கொண்டால் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விளையாட்டு மைதானத்திற்கு உள்ளே சென்றுவிட்டு விளையாட்டு போட்டியும் நடக்கவிடாமல் இரவுப்பகலாக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினால் உலகம் முழுவதும் இந்த செய்தி போய்சேரும் என்கின்ற திட்டம் பரிசீலிக்கப்படுகிறது. அப்படி உள்ளிருப்பு போராட்டத்தை உள்ளே செல்பவர்கள் ஆரம்பித்துவிட்டால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல தமிழகம் பூராவும் அது பற்றிக்கொள்ளும்.  மாநில அரசு காவல்துறையை கொண்டு கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. காவல்துறையில் இருப்பவர்களும் தமிழர்கள் தானே. அவர்களுக்கும் காவிரி தண்ணீர் வேண்டும் தானே.

தமிழக அரசே உண்ணாவிரதம் போன்ற அறவழிப் போராட்டங்களை முன்னெடுக்கும் நிலையில் தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற அழுத்தத்தை கொடுப்பதற்காக இப்படிப்பட்ட முயற்சியை இளைஞர்கள் முன்னெடுத்தால் அது வெற்றி பெறும். ஆனால் அதேசமயத்தில் இந்த உணர்வு பூர்வமான போராட்டம் வன்முறைகளுக்கு வித்திடலாம். சட்டம் ஒழுங்கு தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் இல்லாமல் போகலாம். இப்படிப்பட்ட நிலைப்பாடுகளை தவிர்க்க தமிழக அரசு வரும் 10-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கின்ற IPL போட்டியை நடத்த விடக்கூடாது.

இதேபோல ஒரு சூழ்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியை சேப்பாக்க மைதானத்தில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டதை ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். IPL போட்டி என்பது ஒரு கொண்டாட்டம். கொண்டாடுகின்ற மனநிலையில் தமிழர்கள் இல்லை. அதை இந்த உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. உடனடியாக IPL போட்டிகளை இப்போது நடத்த முடியாது என்று தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் நடக்கின்ற காவிரி உரிமை போராட்டத்தை IPL போட்டி திசைதிருப்பி விடக்கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்