மாநகர பஸ்களில் 20ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு அறிமுகம்
சென்னையில் இயக்கப்படும் அனைத்து மாநகர பஸ்களிலும் வரும் 20ம் தேதி முதல் மின்னணு பயணசீட்டு மட்டுமே வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்குமான மின்னணு பயணச்சீட்டு பயன்பாடு தொடர்பாக ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலர் டேவிதார் தலைமை தாங்கினார். ஆய்வு கூட்டத்தில் மின்னணு பயணச்சீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களான அனலாஜிக்ஸ்டெக் இந்திய நிறுவனம் மற்றும் இன்ஜெனரி டெக்னாலஜிஸ் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று மின்னணு பயணச்சீட்டுத் திட்டம் நடைபெற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினர்.
தற்பொழுது பயன்பாட்டில் உள்ள மின்னணு பயணச்சீட்டு சாதனங்களை முழுவீச்சில் விரிவாக்கம் செய்து வருகிற 20ம் தேதி முதல் மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னையில் அனைத்து பேருந்துகளிலும் மின்னணு பயணச்சீட்டு முழு அளவில் பயணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.