கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை - திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலையில் அருகே உள்ள களமருதூர் பகுதியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் வெவ்வேறு பள்ளிகளில் படித்தாலும் ஒரே பகுதியில் வசித்து வந்ததால் ஊரில் அடிக்கடி ஒன்றாக விளையாடி அதன் மூலம் நண்பர்களாக இருந்துள்ளனர்.
இவர்கள் மூவரும் நேற்று முன் தினம் காலை களமருதூர் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியுள்ளனர். மாலை வரை வீட்டிற்குத் திரும்பாததால் பிள்ளைகளின் பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். மேலும் அருகில் உள்ள உறவினர் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர். அங்கும் இவர்கள் இல்லாததால் அதன்பிறகு திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உளுந்தூர்பேட்டை செல்லும் அரசு பஸ் மூலம் மூன்று மாணவர்களும் ஏறிச் சென்றதாக சிலர் தகவல் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் வசித்து வரும் சிறுவர்களில் ஒருவனின் அத்தை வீட்டில் மூன்று சிறுவர்களும் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. விரைந்து சென்னைக்குச் சென்ற போலீசார் அங்கிருந்து மூன்று மாணவர்களையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அழைத்து வந்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில், களமருதூரில் இருந்து உளுந்தூர்பேட்டை பஸ்ஸில் வந்து இறங்கிய மூவரும் உளுந்தூர்பேட்டையிலிருந்து சிதம்பரம் செல்லும் பஸ்ஸில் சிதம்பரம் சென்றுள்ளனர். சிதம்பரத்திலிருந்து ரயில் மூலம் சென்னை எழும்பூர் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் ராயபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றதாகக் கூறியுள்ளனர்.
எதற்காக சென்னைக்குச் சென்றார்கள் என்பது குறித்து கேட்டபோது திரைப்படத்தில் நடிக்கும் ஆவலில் புறப்பட்டுச் சென்றதாகக் கூறியுள்ளனர். காணாமல் போன சிறுவர்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த காவல்துறையினருக்கு சிறுவர்களின் பெற்றோர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.