சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "ஒமிக்ரான் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ஒமிக்ரான் கரோனா பாதிப்பு தமிழ்நாட்டிற்குள் இன்னும் பரவவில்லை. சென்னை, திருச்சியில் ஒமிக்ரான் உறுதியானதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல் தவறு. ஒமிக்ரான் கரோனாவைக் கண்டுபிடித்த மருத்துவரே ஒமிக்ரானைப் பற்றி அச்சப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளார். ஒமிக்ரான் வேகமாகப் பரவக்கூடியது; ஆனால் யாரும் பீதியடைய வேண்டாம்.
சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த நபருக்குக் கரோனாதான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒமிக்ரான் உறுதியாகவில்லை. திருச்சி வந்த பயணிக்கு ஒமிக்ரான் பாதிப்பா என்பது குறித்து அறிய, மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பெங்களூருவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட மாதிரியின் முடிவு வந்த பிறகே என்ன வகை கரோனா எனத் தெரியும். கரோனா பரவிய நாடுகள் மட்டுமின்றி மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் கண்காணிக்கிறோம். பிரிட்டனிலிருந்து சென்னை வந்த குடும்பத்தில் 10 வயது குழந்தைக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் கரோனா பாதிப்பு உறுதியானால் அரசு முறைப்படி தெரிவிக்கும்; அதுவரை வதந்தி பரப்பாதீர். கரோனா பரிசோதனை கட்டணத்தை செலுத்த முடியாத விமான பயணிகளுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும். ஆர்டிபிசிஆர் கட்டணம் ரூபாய் 700ஐ கட்ட முடியாதவர்களுக்குத் தமிழ்நாடு அரசே கட்டணத்தை செலுத்தும்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.