மாட்டுத் தொழுவ முன்பகுதியில் வாழ்ந்து, வறுமையில் உழன்ற குழந்தைகளுக்கு புத்தாடை, ஸ்கூல் பேக், ஷூ உள்ளிட்டவைகளை வழங்கி குட்டித் தேவதைகளாக்கி, அவர்களுடனே தீபாவளி கொண்டாட வழி வகுத்துள்ளார் புளியங்குடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஆடிவேல்.
நெல்லை மாவட்டம் சிவகிரி சேணைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியின் எதிரில் இருக்கும் மாட்டுத் தொழுவத்தின் முன்பகுதியில் உள்ள மூன்று குழந்தைகள் மேல் தற்பொழுது வெளிச்சம் விழுந்துள்ளது. குழந்தைகள் சிறுவயதாக இருக்கும் போதே அவர்களின் தந்தைகள் தவிக்கவிட்டு செல்ல, கூலி வேலை செய்து செல்வம் இல்லாவிட்டால் என்ன..? கல்வி செல்வத்தையாவது கொடுபோம் என தன் மகள்கள் பிரவீனா, மகேஸ்வரி மற்றும் மாரிச்செல்வி ஆகிய மூன்று பெண் குழந்தைகளையும் வறுமையினூடே, கல்வி கொடுத்து வருகின்றார் மாரியம்மாள்.
இதில், மூத்த குழந்தை பிரவீனா தேவிப்பட்டிணம் ஸ்டெல்லா பள்ளியில் 9ம் வகுப்பு படிக்க, மற்றைய இரு குழந்தைகளும் உள்ளூர் பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வருகின்றனர். என்னதான் கல்வி பயின்றாலும் குழந்தைகள் தானே..? தன்னுடைய தீபாவளி ஆசைகளை அவ்வப்போது வெளிப்படுத்த மாரியம்மாளுக்கு அதனை நிறைவேற்ற இயலாத நிலை. இத்தகவல் வள்ளலார் வழி அடிகளாருக்கு செல்ல, குழந்தைகள் குட்டி தேவதைகளாகியுள்ளனர்.
"அனைத்துக் குழந்தைகளுக்கும் எதிர்பார்ப்பான பண்டிகை என்றால் அது தீபாவளிப் பண்டிகைதான்.! குழந்தைகள் சிறு வயதாக இருக்கும் போதே அவர்களின் அப்பா அவங்களை விட்டு பிரிந்துவிட்டார். அவர்களது தாயின் கூலி வேலையில்தான் அந்த குழந்தைகள் வாழ்கிறார்கள் ! எனும் தகவலை அந்த ஊர்க்காரங்க எங்கிட்ட கூற, நானும் குழந்தைகளின் நிலையை விளக்கி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் அவர்களிடம் கூறினேன் , அவர் தன்னுடைய சொந்த வாகனத்தை அந்த குழந்தைகளின் வசிப்பிடத்திற்கு அனுப்பி அவங்களை அழைச்சுக்கிட்டு புளியங்குடியிலுள்ள இரண்டு பெரிய ஜவுளிக்கடைக்குக் கூட்டிட்டு போய், என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் " எனக் கூற சிறிது நேரத்திலேயே புத்தாடைகளை தேர்வு செய்து, தனக்கு அணிவித்து அழகுப் பார்த்துக் கொண்டது அக்குழந்தைகள்.
அதுபோக, அவர்களுக்கு தேவையான ஸ்கூல் பேக், ஷூ, செப்பல் என அனைத்தையும் வாங்கிக் கொடுத்து, அவர்களுடனே தீபாவளி கொண்டாடுவதாக உறுதி கொடுத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் ஆடிவேல். அவருடைய மனிதநேயம் போற்றத்தக்கது" என்கிறார் வள்ளலார் அடிகளார் நாதகிரி வீரபத்திரன். நாமும் வாழ்த்துவோமாக.!!!