நீர்நிலைகள் பராமரிப்புக்கு கூலி இல்லாமல் செய்யும் 'ஆளமஞ்சி' எனும் கட்டாய வேலை தலைமுறை தலைமுறையாகத் தொடர வலியுறுத்தும் கல்வெட்டு தேவகோட்டை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், வாடி நன்னியூர் கண்மாய் அருகில் ஒரு கல்வெட்டு இருப்பதாக திருவாடானை நாகணி ஆசிரியர் அர்ச்சுனன், வாடி நன்னியூர் ரெத்தினம் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார்.
இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது, "வாடி நன்னியூர் கண்மாய் அருகில் 2 அடி உயரமும் 1 அடி அகலமும் உள்ள வைரம் போன்ற அமைப்பில் உள்ள ஒரு கருங்கல்லில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதை அரிவாள் தீட்டுவதற்குப் பயன்படுத்தியதால் மன்னர் பெயர் இருந்த முதல் வரி அழிந்துவிட்டது. தற்போது இக்கல்வெட்டில் 13 வரிகள் மட்டுமே உள்ளன. பிறவரி, ஆளமஞ்சி ஆகியவை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக நடைபெற வேண்டும். இதற்கு யாராவது தீங்கு செய்தால் அவர்கள் கங்கை மற்றும் சேதுக்கரையில் காராம் பசுவையும், பெற்றோரையும் கொன்ற தோசத்திலே போகக் கடவதாக என்பது கல்வெட்டு சொல்லும் செய்தி.
இதில் நிலத்துக்கு விதிக்கப்படும் புரவரியை பிறவரி எனச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. நீர்நிலைகள் பராமரிப்புக்கு கூலி இல்லாமல் செய்யும் கட்டாய வேலை ஆளமஞ்சி எனப்படுகிறது. இந்த இரண்டும் சந்திரன், சூரியன் உள்ள வரை தொடர்ந்து நடைபெற வேண்டும் என சந்திரப் பிரவேசமாகக் கட்டளையிடப்பட்டுள்ளது. இதில் ஒருசேர இணைத்து என்பதற்கு 'அன்றில்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தலைமுறை தலைமுறையாக என்ற பொருளில் சந்ததிப் பிரவேசம் என்பதை சந்திரப் பிரவேசம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கல்வெட்டில் ‘ர்,ர’ ஆகிய எழுத்துகள் சேர்ந்து ‘ள’ போல உள்ளது. ‘த’ என்ற எழுத்து ‘ற’ என எழுதப்பட்டுள்ளது. எழுத்துகளை சேர்த்து கூட்டெழுத்தாக பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இது கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். கல்வெட்டில் மன்னர் பெயர் இல்லை என்றாலும், இதன் அமைப்பைக் கொண்டு இது சேதுபதி மன்னர்கள் அல்லது அவர்கள் அரசப் பிரதிநிதிகளின் கல்வெட்டு எனக் கருதலாம். தற்போது இவ்வூர் வாடி நன்னியூர் என அழைக்கப்பட்டாலும் கல்வெட்டில் நன்னியூர் வாடி எனக் குறிப்பிடப்படுகிறது. முல்லை நிலத்து ஊர் என்ற பொருளில் பாடி என அழைக்கப்பட்டு அது வாடி எனத் திரிந்துள்ளது. வாடி என்பதற்கு சாவடி என்ற பொருளில் காவல் அலுவலகமாகவும் இவ்வூர் விளங்கியிருக்கலாம். நன்னியூர் என்பதற்கு சிறிய ஊர் என்பது பொருள்.
இவ்வூரில் கி.பி.13- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எட்டுக்கைகள் கொண்ட காளி சிற்பம் சிறிய கோயில் அமைத்து வழிபடப்படுகிறது. இக்கோயில் முன் உடைந்த திருமால் சிற்பமும் உள்ளது. இங்கு இடைக்காலத்தைச் சேர்ந்த சிவப்பு வண்ணப் பானை ஓடுகள் கண்மாய்ப் பகுதியில் காணப்படுகின்றன. இதன்மூலம் இவ்வூரில் கி.பி.13- ஆம் நூற்றாண்டு முதல் மக்கள் குடியிருப்பு இருந்துள்ளதை அறிய முடிகிறது" இவ்வாறு அவர் கூறினார்.