ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடற்படை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் சென்ற படகின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் காயமடைந்தார்.
நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்து கடற்படை விளக்கம் அளித்துள்ளது. அதில் சந்தேகப்படும் படி சென்றுகொண்டிருந்த படகை தொடர்ந்து நிறுத்தச் சொல்லியும் எச்சரித்தும் கேட்காமல் விரைந்து சென்றதால் தாக்குதல் நடத்தப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது. படகு நிற்காமல் சென்றதால் விதிமுறையின் படி துப்பாக்கியால் சுட்டதாகவும், படகு மேற்படி முன்னேறாமல் இருக்க அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
காயமடைந்த மீனவருக்கு முதலுதவி அளித்து ஹெலிக்காப்டர் மூலம் ராமநாதபுரம் அழைத்துச் சென்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம் என கடற்படையால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம் என்றும் கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான மயிலாடுதுறை மீனவரை அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து விசாரித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன், “10 மீனவர்கள் சென்றுள்ளனர். அதில் 3 பேர் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்கள் 6 பேர். மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய கடற்படை வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் வீரவேல் என்ற மீனவர் காயம் பட்டு தற்போது ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தார். மதுரையில் இருக்கும் அமைச்சர் மூர்த்தி மற்றும் எம்.பி சு. வெங்கடேசன் அத்தனை பேரும் இன்று அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்தோம். அங்கு மீனவரை குணப்படுத்திவிடலாம் என மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்” எனக் கூறினார்.