தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (19/02/2022) காலை 07.00 மணிக்கு தொடங்கி மாலை 06.00 மணி வரை நடைபெற்றது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில், சீலிடப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வாக்கு எண்ணும் மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எனினும், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த், சிம்பு, ஜெயம் ரவி, தனுஷ், விஷால், அஜித் குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாக்களிக்காதது மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் 100% வாக்குப்பதிவு என்ற இலக்கை நோக்கி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பிரபல நடிகர்கள், நடிகைகள் வாக்களிக்காமல் இருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாராவ் இந்தியா செரிஃப் என்பவர், அமெரிக்காவில் ஐ.டி. நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக, அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்துள்ளார். அதைத் தொடர்ந்து, தனது சொந்த மாவட்டத்திற்கு சென்ற அவர், அங்கு தனது வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று, வாக்கைப் பதிவு செய்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார். கடல் கடந்து வந்து வாக்களித்த அவருக்கு, பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.