வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனையடுத்து, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, ‘இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதனால், தென்மாவட்டங்களில் மீண்டும் நாளை (31-12-23) கனமழை பெய்யக்கூடும்’ என்று குறிப்பிட்டது.
இந்த நிலையில், 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் நள்ளிரவு 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.