நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டைக்கு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். அதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை 3வது முறையாக ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றும் போது, “சுதந்திர தின விழாவில் மாநில முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர். அவரது நூற்றாண்டில் கோட்டையில் கொடியேற்றுவதைப் பெருமையாக கருதுகிறேன். இந்தியாவின் முக்கியமான அங்கமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. மூத்த மொழி தமிழ் மொழி. சமூகநீதி நிர்வாக ஆட்சி முறை இந்தியா முழுவதும் பரவ வேண்டும். ஒற்றுமையால் கிடைத்த விடுதலையை அதே ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம்; நாம் இந்தியர்கள் என்ற பெருமையுடன் நம் இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்.
மாநிலங்களுக்கு மாநிலம் உணவு, பண்பாடு, மொழியில் மாறுபாடு உள்ளது. வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ்வதே நம் பலம். மூவர்ணக் கொடியைப் போற்றுவதன் மூலம் நாட்டையும், நாட்டு மக்களையும் போற்றுகிறோம். மதங்களின் பெயரால் மக்களிடையே உள்ள பிளவைக் களைய முயன்றவர் மகாத்மா காந்தி. பாலுக்கு அழும் குழந்தை, வேலைக்கு அலையும் இளைஞர் இல்லாத இந்தியாவே சுதந்திர இந்தியா என்றார் பகத் சிங். காந்தி, அம்பேத்கர், நேதாஜி, பகத் சிங் என எல்லாத் தலைவர்களும் நல்லிணக்க இந்தியாவைத் தான் விரும்பினர். சமூகநீதி, சமத்துவம், மதநல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டதுதான் தி.மு.க. அரசு. அனைவருக்குமான அரசாக, அனைவரின் வளர்ச்சிக்குமான அரசாக செயல்பட்டு வருகிறோம்; நாட்டின் வளர்ச்சி பெண்களிடமிருந்தே தொடங்குகிறது என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறோம்; புதுமைப் பெண், கட்டணமில்லா பேருந்து சேவை என பெண்களுக்கான திட்டங்களை வகுத்துள்ளோம்.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும். ஓலா, ஊபர், ஸ்விக்கி, சுமேட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த ஊழியர்களின் நலனைப் பாதுகாக்க அவர்களுக்காகத் தனி நல வாரியம் அமைக்கப்படும். அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் பயணிக்கும் திட்டத்திற்கு ‘விடியல் பயணம்’ எனப் பெயர் சூட்டப்படுகிறது. சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.11 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். நடப்பாண்டில் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 55 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்காக மேலும் 500 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்; காலை உணவு திட்டத்தால் 31 ஆயிரத்து 88 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்.