சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு கடந்த 8 மாதமாக ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை போராட்டம் நடத்தியும் அரசு ஊக்கத் தொகை வழங்கவில்லை.
இதைத் கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் சுமார் 75 பேர் இன்று திடீர் போராட்டத்தை துவக்கினர். பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தை துவக்கியுள்ளனர். அரசு கல்லூரி பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை போல தங்களுக்கும் உடனே வழங்க வேண்டும் என்பதே இந்த மாணவர்களின் கோரிக்கையாகும்.
இதுபற்றி கூறிய பயிற்சி மருத்துவர்கள், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக இந்த கல்லூரி மாற்றப்பட்டு கடந்த 8 மாதங்களாக எங்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாதாந்திர உதவித்தொகை ஒவ்வொரு பயிற்சி மருத்துவருக்கும் சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆனால், பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ஒரு ரூபாய் கூட ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு கல்லூரி பயிற்சி மருத்துவர்களைப்போலவே கரோனா பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். அதனால் சுமார் 45 பேர் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையிலும், மக்களின் நலன் கருதி பணியாற்றி வந்தோம். எங்களது ஊக்கத் தொகை குறித்து அரசுக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை வழங்கவில்லை. அதனால் தமிழக முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு பயிற்சி மருத்துவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை மற்ற அரசு கல்லூரிகளில் வழங்கப்படுவதைப் போல வழங்க உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல் கவன ஈர்ப்பு போராட்டத்தை துவக்கி இருக்கிறோம் என்றனர்.