விலங்குகள் பற்றிய கணக்கெடுப்பு தழிழக காடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இந்த வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் அடுத்த 20 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு தொடங்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் வனப் பகுதியான தூக்கநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் கடம்பூர், மல்லியம்மன் துர்க்கம், விளாங்கோம்பை, பங்களாபுதூர், கணக்கம்பாளையம் என ஏழு காவல் சுற்றுப்பகுதிகளில் ஆறு பேர் கொண்ட தனிக்குழு இந்த கணக்கெடுக்கும் பணியில் இறங்கியுள்ளது.
வனக்காவலர்கள் அதிநவீன கருவிகளுடன் காடுகளில் வனவிலங்குகளை கணக்கெடுத்து வருகிறார்கள். அதன்படி, வனவிலங்குகளை நேரில் பார்ப்பது, அடுத்து அவைகளின் கால் தடங்களை சேகரிப்பது, விலங்குகளின் எச்சம் உள்ளிட்ட வகைகளை சேகரிப்பது ஆகிய பணிகளை செய்கிறார்கள். இந்த வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கழுதைப் புலிகள், கரடிகள் மற்றும் புலிகள் நடமாட்டம் உள்ளது. இந்த வன விலங்குகள் சமீபகாலத்தில் அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதைப்பற்றிய ஆய்வாக இது அமையும். இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக இனப்பெருக்கத்தில் சிறுத்தை மற்றும் புலிகளின் எண்ணிக்கை மிகவும் கூடியுள்ளதாகவும் வனத்துறையினர் கூறுகிறார்கள்.