தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று (10/06/2022) ஒரே நாளில் 200- க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் ஜூன் 12- ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் மெகா கரோனா தடுப்பூசி முகாமை நடத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழகக் காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில், கரோனா பரவல், தடுப்பூசிப் போடும் பணிகள் குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.