தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,559 லிருந்து குறைந்து 1,542 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று குறைவாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,62,487 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 162 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 175 என்று இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,835 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 20 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 1 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,797 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,793 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,56,116 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கோவை-231, ஈரோடு-122, திருவள்ளூர்-70, தஞ்சை-58, நாமக்கல்-48, திருச்சி-45, திருப்பூர்-64, கடலூர்-41 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கோவையில் 216 பேருக்கு கரோனா உறுதியாகியிருந்த நிலையில் இன்று சற்று அதிகரித்து அங்கு 231 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா ஓரளவிற்கு கட்டுக்குள் இருக்கும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று 30,007 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதியாகியிருந்த நிலையில், இன்றும் கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 32,801 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 179 பேர் உயிரிழந்துள்ளனர். ஓணம் பண்டிகைக்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த மூன்று நாட்களாக கேரளாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.