காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது நீர் வரத்து 22,000 கன அடியிலிருந்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீரின் அளவு 36 ஆயிரம் கன அடியிலிருந்து 36,446 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையிலிருந்து 30 ஆயிரம் கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 6,446 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6,841 கன அடியிலிருந்து 19,665 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.27 அடியாகவும், நீர் இருப்பு 35.57 டிஎம்சி ஆகவும் இருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட விவசாய பாசன தேவைக்காக 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
தமிழகத்தில் பல நாட்களாக மழை பொழிவு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் சோலையாறு அணை பகுதியில் 9.3 சென்டி மீட்டர் மழையும், நீரார் அணையில் 7.3 சென்டிமீட்டர் மழையும், சின்னக்கல்லாரில் 6.8 சென்டி மீட்டர் மழையும், வால்பாறையில் 2.9 சென்டி மீட்டர் மழையும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது. 165 அடி கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 163 அடியாகவும், நீர்வரத்து 6,622 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 5.59 டிஎம்சி ஆக உள்ள நிலையில் அணையிலிருந்து 6,655 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.