திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நெல்மணிகள் முழுவதும் ஈரமாகிவிட்டதால் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பத அளவை 22% உயர்த்த வேண்டும் என மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் முதுநிலை மண்டல மேலாளரிடம் மனு அளித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீரைக்கொண்டு சாகுபடி செய்யப்பட்ட குறுவை சாகுபடி பயிர்கள் தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. அதே வேளையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் அறுவடைக்கு வயலில் தயாரான நிலையில் இருந்த நெல் வயல்கள் முழுவதும் தண்ணீர் தேங்கி நெல்மணிகள் முழுவதும் ஈரமாகி முளைக்க துவங்கிவிட்டது. அதோடு அறுவடை செய்யப்பட்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்ட நெல் முழுவதும் போதிய பாதுகாப்பு வசதியின்றி நனைந்தால் விவசாயிகள் செய்வதறியாமல் கையறுநிலையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் பயன் பெரும் வகையில் மூடி கிடக்கும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறக்க வேண்டும். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பத அளவை 22% உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணனிடம் மனு அளித்துள்ளார்.