அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அஷோக்குமார் மற்றும் இவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என மொத்தம் 30க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனை தொடர்ந்து எட்டு நாட்களுக்கு நடைபெற்றது. இதில் சில இடங்களில் சீல் வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு சில நாட்கள் கழித்து இரண்டாவது முறையாக மீண்டும் அசோக்குமார் வீடு அலுவலகங்கள் மற்றும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சீல் வைக்கப்பட்ட இடங்களில் மீண்டும் அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.
அதற்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த ஜூன் 13 ஆம் தேதி சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையின் முடிவில் அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியின் காரணமாக அவர் முதலில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிறகு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
செந்தில் பாலாஜி கைது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. செந்தில் பாலாஜியின் மனைவி, அவரது கைதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான மூன்றாவது நீதிபதியின் விசாரணை இன்று (11 ஆம் தேதி) நடந்து வருகிறது.
இந்நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணி வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன், இரண்டு வாகனங்களில் வந்த ஐந்து அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.