திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி, மேல் மிட்டாளம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தசாமி. இவரது மனைவி 50 வயதான கிருஷ்ணவேணி. இவர் சின்னவரிக்கம் பகுதியில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி மதியம் வேலூரில் இருந்து வந்த வணிகவரித்துறை அதிகாரிகள் கிருஷ்ணவேணியின் முகவரியை ஊரில் விசாரித்துள்ளனர்.
அவர்களை ஏன் விசாரிக்கிறீர்கள் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு, கோவிந்தசாமியின் மனைவி கிருஷ்ணவேணிக்கு சொந்தமான பழைய இரும்பு தளவாடங்கள் விற்கும் நிறுவனம் மற்றும் தோல் பொருட்கள் விற்கும் நிறுவனம் சென்னையில் இயங்கிவருகிறது. கம்பெனியின் கணக்குகளை முறையாக பராமரிக்காமல், வணிக வரித்துறைக்கு கட்ட வேண்டிய வரி பாக்கியை கட்டாமல் ஏமாற்றி வருகிறார். அதனால் அவரிடம் விசாரிக்க வந்துள்ளோம் என கூறியுள்ளனர்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ''கூலி வேலைக்குப் போனால்தான் அவங்களுக்கு சாப்பாடு, இதுல கம்பெனி இருக்குன்னு ஏன் சார் காமெடி செய்யுறிங்க'' என கேட்டுள்ளனர்.
இருந்தும் வீட்டை கண்டுபிடித்து சென்று கிருஷ்ணவேணியிடம் விசாரித்துள்ளனர். அதற்கு கிருஷ்ணவேணி ''தோல் தொழிற்சாலையில் எனது கணவரான கோவிந்தசாமியும், காலணி தொழிற்சாலையில் நானும் சென்று கூலிக்கு வேலை செய்யும் போது, எங்களுக்கு எப்படி கம்பெனிகள் இருக்குமென'' கேட்டார். அங்கிருந்த பொதுமக்களும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவிந்தசாமியின் மனைவி கிருஷ்ணவேணியின் ஆதாரங்களையும், ஆவணங்களையும் முறைகேடாக யாரோ ஒருவர் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்தது. முறைகேடாக ஆவணங்களைப் பயன்படுத்தி வணிகவரித்துறையை ஏமாற்றி மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் கூறினர். கோவிந்தசாமியின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என எழுதி வாங்கிய அதிகாரிகள், துறை ரீதியான விசாரணைக்கு அழைக்கும்போது வந்து ஒத்துழைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
கூலித்தொழிலாளியின் ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி கம்பெனி தொடங்கியது ஒருபுறம்மென்றால் அதற்கு அனுமதி வழங்கியது அதிகாரிகள் தானே, அவர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளன.