108 ஆம்புலன்சில் மருத்து உதவியாளராக பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவர் சனிக்கிழமையன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் ஊழியரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் தற்பொழுது சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காவல்துறை துணைச்சரகத்திற்கு உட்பட்ட பெத்தாச்சிக் குடியிருப்பு பகுதியை சேர்ந்த குட்டியான் - பேச்சி தம்பதியின் மகளான கற்பகவல்லி கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக புதுவயல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்திருக்கின்றார். இந்நிலையில், சனிக்கிழமையன்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட தங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாக்கோட்டைப் போலீசார் கற்பகவல்லியின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று பிரேதப்பரிசோதனை நடக்கவுள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில், " கற்பகவல்லியின் தாடையில் காயம் உள்ளதால் இவரது மரணத்தில் சந்தேகப்படுகின்றோம்.. டிஎஸ்பி உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவக்குழு வந்த பிறகே பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும்." என காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரியிடம் கோரிக்கை வைத்த நிலையில், பிரேதப் பரிசோதனை துவங்கியதால் இறந்த கற்பகவல்லியின் உறவினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் காங்கிரஸ்காரர்கள் உள்ளிட்ட பலர் சாலை மறியலில் ஈடுப்பட்டு போராடி வருகின்றனர். சாலைமறியலில் ஈடுப்பட்ட நபர்களிடம் தற்பொழுது பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளது காரைக்குடி துணைச்சரக காவல்துறை. சாலையின் இருபுறமும் மறிக்கப்பட்டதால் வாகனங்கள் சாலையை கடக்க முடியாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.