தர்மபுரியில், பள்ளி முடிந்து சீருடையில் மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றிக்கொண்டிருந்த மாணவர்களை சாலையிலேயே சரமாரியாக தாக்கிய அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் - மொரப்பூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
இப்பள்ளித் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புதன்கிழமை (பிப். 19) மாலையில், பாலக்கோட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் அவருடைய பள்ளி மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை வழிமறித்த கிருஷ்ணமூர்த்தி, ''தேர்வு நேரத்தில் எதற்காக பொறுப்பில்லாமல் இந்த நேரத்தில் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள்?'' எனக்கேட்டு, அவர்களை எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாணவர்கள் எதிர்த்துப் பேசியதால் கோபம் அடைந்த தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, சாலையிலேயே மாணவர்களை சரமாரியாக அடித்தார். இதைப்பார்த்த அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் சிலர், தலைமை ஆசிரியரை தடுத்து, தட்டிக்கேட்டனர்.
அதற்கு தலைமை ஆசிரியர், ''இவர்கள் என் பள்ளி மாணவர்கள். அவர்களை நான் அடிப்பேன். நீங்கள் கேட்கக்கூடாது. ஊர் சுற்றிய மாணவர்களை அடிப்பது குற்றமா?,'' என்று பதில் சொன்னார். இந்த பதிலால் திருப்தி அடையாத பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து எங்கும் செல்ல முடியாதபடி முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலைமை ஆசிரியரை பத்திரமாக மீட்டனர்.
பள்ளி மாணவர்களை அடிக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அவர்களை சாலையிலேயே சரமாரியாக தாக்கிய தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அவரிடம் விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பி உள்ளார்.
இந்தப்பள்ளியில் பணி நேரத்தில் வெளியே சுற்றிக்கொண்டிருந்ததாக 11 ஆசிரியர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு, மாவட்டக்கல்வி நிர்வாகம் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கியது. ரியல் எஸ்டேட் தகராறில் அதிமுக பிரமுகர் ஒருவர், இப்பள்ளி ஆசிரியர் ஒருவரை சிறைப்பிடித்த சம்பவமும் நடந்துள்ளது. அண்மையில், பெண் ஆசிரியர் ஒருவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து இப்பள்ளி ஏதாவது ஒரு பிரச்னையில் சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.