Skip to main content

பிரபல தொழிலதிபர் மணல் ராமச்சந்தின் அலுலகத்தில் பணம் கொள்ளை!

Published on 27/12/2020 | Edited on 27/12/2020

 

தமிழகத்தின் பிரபல மணல் ஒப்பந்தக்காரர் முத்துப்பட்டினம் ராமச்சந்திரன். பல அரசியல் கட்சிகளுக்கும் மிகவும் நெருக்கமானவர். தேர்தல் வந்துவிட்டால் பல அரசியல் கட்சிகளுக்கும் நிதி வழங்கி தனது தொழிலை தக்க வைத்துக் கொள்வார். மணல் ஒப்பந்தம் இல்லை என்பதால் தற்போது கிராவல் விற்பனை தொடங்கி உள்ளார். இவருக்கு மட்டும் மண், மணல், கிராவல் எடுக்க எப்போதுமே அனுமதி உண்டு. அனுமதியே இல்லை என்றாலும் இவரது பேரில் உள்ள வாகனங்களை எந்த இடத்திலும் பிடிக்க மாட்டார்கள். அத்தனைத்துறை அதிகாரிகளும் அவரது விரல் அசைவுக்கு கட்டுப்படுவார்கள். கடந்த வருடம் தஞ்சை எம்.பி பழனிமாணிக்கம் தம்பி ராஜ்குமார் மகனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்து தி.மு.க உடனான உறவை வலுப்படுத்திக் கொண்டார். அதே போல அதிமுகவில் அமைச்சர்கள் பலர் அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து செல்வார்கள்.

 

தற்போது மணல் குவாரி குறைந்திருப்பதால் வம்பனில் புஷ்கரம் என்ற பெயரில் வேளாண்மை கல்லூரியும் தொடங்கி உள்ளார். இவரது குவாரியில் ஓடிய பொக்கலின், லாரிகள் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்து தற்போது ஓடத் தொடங்கியுள்ளது. விரைவில் ஆளுங்கட்சி அமைச்சருடன் கூட்டணி அமைத்து காவிரி- குண்டாறு இணைப்பிற்கான கால்வாய் வெட்ட வாகனங்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

இவருக்கு புதுக்கோட்டை பிரகதாம்பாள் பள்ளிக்கு பின்பக்கம் ஆடிடிங் அலுவலகம் இயங்கி வருகிறது. (பல தொழிலதிபர்களுக்கும் இது தான் ஆடிடிங் அலுவலகம்) இந்த அலுவலகத்தில் பலர் வேலை செய்து வருகின்றனர்.இந்தநிலையில்தான் இன்று காலை அலுவலகத்தை திறக்க வந்த ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளை போயிருந்தது. உடனே முத்துப்பட்டினம் ராமச்சந்திரனுக்கும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அடுத்த சில நிமிடங்களில் நகர டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்கள் என போலீஸ் படையே வந்து சோதனை செய்தனர். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் வந்துள்ளனர். ஆனால் கொள்ளைபோன பணம் எவ்வளவு என்பது பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. அதனால் கொள்ளை போன பணத்தின் மதிப்பு அதிகமாக இருக்கலாம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஆனால் அலுவலக ஊழியர்களோ பணம் கொள்ளை போகவில்லை  கொள்ளை முயற்சி தான் என்கிறார்கள்.

 

எது எப்படியோ புகார் கொடுக்காமலேயே திருடனை பிடிக்க பல தனிப்படைகள் ரகசியமாக செயல்படும் என்பதில் சந்தேகமில்லை. விரைவில் திருடன் பிடிபடலாம். ஆனால் கொள்ளையின் மதிப்பு குறைவாக காட்டப்படலாம். இத்தனைப் பெரிய அலுவகத்தில் ஒரு கண்காணிப்பு கேமரா கூட இல்லையாம்.  

 

 

சார்ந்த செய்திகள்