Skip to main content

டிக் டாக் கணவன், டிக் டாக் காதலியுடன் மாயம்... வீடு, நகைகளைப் பறிகொடுத்த மனைவி வீதியில்!!

Published on 15/07/2020 | Edited on 16/07/2020

 

incident in nellai

 

நெல்லை மாவட்டத்தின் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராஜ். அடிப்படையில் டெய்லர் வேலை பார்ப்பவர். சென்னையில் இருந்திருக்கிறார். இவரது உறவுக்காரரான பிச்சமுத்து குடும்பத்துடன் மும்பையில் வசிப்பவர். உறவு விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக அவரின் மகள் ஜாய்சி தன்னைவிட நான்கு வயது மூத்தவள் என்றாலும் அவரை 2008 ஆம் ஆண்டு சுப்புராஜூக்கு திருமணம் முடித்தார். ஆனால் ஜாய்சிக்கோ இந்தி, மராத்தி, ஆங்கிலம் நன்றாக பேச எழுத முடியும், தமிழ் பேச மட்டுமே தெரியுமாம். ஜாய்ச்சிக்கு அவரது பெற்றோர், நகைகள், ரொக்கம் என்று நல்லபடியாகவே வரதட்சணை கொடுத்தே அனுப்பியுள்ளனர். தம்பதியர் சென்னையில் வசித்தனர். அவர்களுக்கு 11 வயதில் மகளும், 8 வயது மகனும் என்று இரண்டு பேர்.

 

கடந்த சில வருடங்களுக்கு முன்னர்தான் சென்னையை விட்டு தங்களின் சொந்த ஊரான வீரவநல்லூருக்கு மனைவி பிள்ளைகளுடன் குடிபெயர்ந்த சுப்புராஜ் அங்கே தன் மனைவியின் பூர்வீக வீட்டிலேயே குடியேறினர். கணவன் சுப்புராஜ் வீரவநல்லூரில் ஆக்டிங் டிரைவாக வேலைக்கு செல்ல மனைவி ஜாய்சி வீட்டிலிருந்தவாறு டெய்லரிங் வேலையைச் செய்துள்ளார்.

 

இதனிடையே அண்டையிலிருக்கும் தெருவில் வசிக்கிற பிரேமா என்ற கணவனைப் பிரிந்த பெண்ணுடன் சுப்புராஜுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பிரேமாவிற்கு தோள் வரை வளர்ந்த இரண்டு மகள்கள். தவிர இணைப் பழக்கமாக டிக் டாக் வீடியோ பதிவிடும் பழக்கம் வேறு சுப்புராஜிடம் ஒட்டியிருக்கிறது. இதைப் போன்றே டிக் டாக்கில் சினிமா பாடலுக்கு ஏற்றபடி நளினமாக நாட்டியமாடும் பழக்கம் பிரேமாவிற்கு இருந்திருக்கிறது. டிக் டாக்கில் ரொமாண்ட்டிக்கான வீடியோ பதிவிடுவதை இவர்கள் வாடிக்கையாக ஆக்கிக் கொண்டனர். பிரேமா, சுப்புராஜின் இந்த ரொமான்ஸ் நெருக்கம் பற்றி மனைவி ஜாய்சிக்குத் தெரியவர குடும்பத்தில் புயலடித்திருக்கிறது.

 

incident in nellai

 

இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான், மனைவி ஜாய்சியின் பெயரிலிருந்த வீட்டை தன் பெயருக்கு சூசகமாக எழுதி வாங்கியிருக்கிறார் சுப்புராஜ். தமிழ் தெரியாத தன்னை ஏமாற்றி எழுதி வாங்கப்பட்டதையும் அவரது முறையற்ற தொடர்பு பற்றியும் வீரவநல்லூர் போலீசில் புகார் செய்த ஜாய்சியை, கணவனோடு ஒத்துப் போகும்படி இருவரையும் சாமாதனப்படுத்தி அனுப்பிய போலீஸ், ஏமாற்றியது பற்றிய புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்த விவகாரம் தொடர, ஜாய்சி கடந்த மே 22ல் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ய, கரோனாவை சாக்காக கொண்ட மகளிர் காவல் நிலையம், புகாரைக் கிடப்பில் வைத்துவிட்டது. இதனிடையே சுப்புராஜ் பிரேமாவுடன் கடந்த சில நாட்களுக்கு முன் ஜுட் விட, பதறிய ஜாய்சி, சந்தேகத்தில், தனது நகையைக் கணவன் கணக்கில் வங்கியில் அடகு வைக்கப்பட்டதை ஆவணங்களுடன் விசாரிக்க, அந்த நகைகளையும் எடுத்துக்கொண்டு காதலியோடு சுப்புராஜ் பறந்தது தெரியவர அதிர்ந்திருக்கிறார்.

 

வீடு, நகைகள் பறிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட ஜாய்சி, தனது குழந்தைகளுடன் வீதிக்கு வராத குறைதான். எனக்கு தமிழ் பேச தெரியும் எழுத்து தெரியாது. கணவனே என்னை ஏமாற்றி என் நகையையும், வீட்டையும் பறித்துக்கொண்டு ஒடியதை போலீசில் முறையிட்டும் பலனில்லையே என பரிதவிக்கிறார் ஜாய்சி. காவல் துறை, முறையான புகாரின் மீது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால், ஜாய்சி போன்ற பெண்ணுக்கு இந்த கதி ஏற்பட்டிருக்குமா?

 

 

சார்ந்த செய்திகள்