தர்மபுரி அருகே, செயல்படாத கல் குவாரி பகுதியில் இரட்டை ஆண் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மர்ம நபர்கள் அவர்களை கொலை செய்து, சடலங்களை வீசி எறிந்து விட்டுச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பூதனஅள்ளி வனப்பகுதியையொட்டி செயல்படாத நிலையில் ஒரு கல் குவாரி உள்ளது. இந்தக் கல்குவாரி பகுதியில் ஜூலை 18ஆம் தேதி, கேட்பாரற்று ஒரு கார் நின்றது. அந்த கார் நின்ற இடத்தில் இருந்து 200 மீ. தொலைவில் 50 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்களின் சடலங்கள் கிடந்தன.
இதுகுறித்து தகவலறிந்த அதியமான்கோட்டை காவல்நிலைய காவல்துறையினர், இரண்டு சடலங்களையும் மீட்டு, உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலம் கிடந்த இடத்தில் ஆதார் அட்டை, பர்ஸ், செல்போன், பெட்ஷீட், லுங்கி உள்ளிட்ட பொருட்களும் சிதறிக் கிடந்தன. அவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சடலமாகக் கிடந்தவர்களில் ஒருவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிவகுமார் (50) என்பதும், மற்றொருவர் நிவில் ஜார்ஜ் குரூஸ் (48) என்பதும் தெரிய வந்தது.
சம்பவ இடத்தில் கேட்பாரற்றுக் கிடந்த கார், அநேகமாக கொலையாளிகள் பயன்படுத்திய வாகனமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்தக் காரையும் பறிமுதல் செய்தனர். மர்ம நபர்கள், சிவகுமார், நிவில் ஜார்ஜ் குரூஸ் ஆகிய இருவரையும் வேறொரு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு, சடலங்களை பழைய கல்வி குவாரி பகுதியில் வீசிச்சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது.
விசாரணையில் அந்தக் கார், ஜூலை 19ஆம் தேதி இரவு ஓமலூர் சுங்கச்சாவடியைக் கடந்து வரும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இரிடியம் உலோக மோசடி விவகாரத்தில் இந்தக் கொலை நடந்ததா, பெண்கள் விவகாரம் காரணமா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மூன்று தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.