தேனி மாவட்டத்தில் உள்ள, கூடலூர் பசும்பொன் நகரைச் சேர்ந்த விவசாயி தவசிக்கு சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வண்டிப்பாதை பகுதியில் உள்ளது. இங்கே அவர் வாழை சாகுபடி செய்துள்ளார். இவரது தோட்டம் அருகே மந்தையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரும், தனக்கு சொந்தமான இடத்தில் இலவம் மரத்தை வைத்து உள்ளார். இந்தநிலையில் கணேசன் தோப்பில் உள்ள மரங்களின் கிளைகள் தவசி வாழைத் தோட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மரக்கிளைகளை வெட்டுமாறு தவசி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தவசிக்கும் கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இரண்டு பேரும் புகார் அளித்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை தோட்டத்துக்கு தவசி நடந்து சென்றார். யாகசாலை பிரிவு பகுதியில் நடந்து சென்றபோது, அந்த வழியாக கணேசனும் வந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கணேசன் தன் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் தவசியின் தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடினார். இதில் நிலைகுலைந்து போன தவசி அந்த இடத்திலேயே துடிதுடித்தார், அதைகண்டு அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே தவசி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூடலூர் வடக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து, தப்பியோடிய கணேசனை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட தவசி கணேசன் தாய்மாமன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தாய்மாமனான தவசியை அடித்துக் கொன்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.