விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ளது கூடுவான் பூண்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(36). இவர் அப்பகுதியில் முடி திருத்தும் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். முருகனுக்கு நந்தினி என்ற மனைவியும், ரக்ஷனா, சஞ்சனா என இரண்டு மகள்களும், காமேஷ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்த மூன்று குழந்தைகளுக்கும் குலதெய்வக் கோவிலில் முடி காணிக்கை செலுத்தி கிடா வெட்டி காது குத்தும் விழா நடத்துவதற்கு முருகன் தடபுடலான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.
அதன்படி நேற்று குலதெய்வம் கோயிலுக்குப் புறப்படுவதற்கான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று இரவு முருகனின் வீட்டுக்கு அவரது உடன் பிறந்த அண்ணன் விநாயகம் (40) வந்துள்ளார். மது போதையில் வந்த அவர், தம்பி முருகன் தனது பிள்ளைகளுக்குக் காது குத்து விழா நடப்பது சம்பந்தமாக கலந்து பேசும்போது, உறவினர்களில் யார் யாரை விழாவுக்கு அழைப்பது என்பது குறித்துப் பேச்சுவார்த்தை இருவருக்குள் எழுந்துள்ளது. அப்போது சகோதரர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியது. இதில் விநாயகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலை முருகன் எதிர்பாராத நிலையில், தம்பி முருகனின் மார்பில் பல இடங்களில் குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வளத்தி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து விரைந்து வந்த போலீசார், இறந்து கிடந்த முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகனின் மனைவி நந்தினி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வளத்தி போலீசார், முருகனின் அண்ணன் விநாயகத்தை கைது செய்தனர். குடி போதையில் தம்பியை அண்ணன் கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.