குடிபோதைக்கு அடிமையான தாய் ஒருவரின் ஆதரவை சாதகமாக்கிக்கொண்ட காமுகர்கள், 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து குழந்தையோடு தவிக்கவிட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய சமுக பணியாளர் ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில், சிறுமியின் தாய் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே உள்ள ஒரு வரதம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி மாரியம்மாள், தூய்மை பணியாளர்களான இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள். அதில் ஒரு பெண்ணை மயிலாடுதுறையிலும், இரண்டாவது பெண்ணை வைத்தீஸ்வரன் கோயிலிலும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். மூன்றாவது பெண் மணல்மேடு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார்.
இந்தநிலையில் மாரியம்மாளுக்கு இருந்த குடிப்பழக்கத்தாலும், தகாத உறவுகளாலும் மனமுடைந்த கலியபெருமாள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலை செய்துகொண்டார். வரதம்பட்டு ஊராட்சியில் தூய்மை பணியாளராக இருந்த மாரியம்மாள், அவரது மகளோடு அங்குள்ள வாட்டர் டேங்க் ஆப்ரேட் ரூமில் குடியிருந்தனர். இந்த சூழலின் மாரியம்மாள் பணத்திற்காக அந்த சிறுமியை அந்த பகுதியில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு பலவந்தமாக இறையாக்கியிருக்கிறார். அதில் கருவுற்ற அந்த சிறுமியின் கருவை கலைக்க அந்த பகுதியில் உள்ள முக்கிய புள்ளிகள் சிலர் பணம் கொடுத்து அனுப்பியுள்ளனர். ஆனால் அந்த சிறுமியின் கருவை கலைக்கமுடியாது, குழந்தையாகிவிட்டது என மருத்துவர்கள் மறுத்துவிட்டதால், நீடூர் என்கிற ஊரில் தனியாக குடிவைத்தனர்.
இந்த நிலையில் அந்த சிறுமிக்கு பிரசவலி எடுக்க மயிலாடுதுறை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர், அங்கு தாலி சர்ச்சை ஏற்படும் என்பதால் மாரியம்மாளே அந்த சிறுமியின் கழுத்தில் மஞ்சல் கயிற்றை கட்டி, இரண்டாவது மகளின் கணவன் தினேஷ்தான் கணவன் என மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனாலும் அந்த சிறுமியின் தோற்றத்தை வைத்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் சமுகநல அதிகாரிகளுக்கு தகவலை கூறிவிட்டு, பிரசவம் பார்த்தனர். அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த சிறுமியிடம் விசாரித்த சமுக நல அலுவலர்கள் தவறு நடந்துள்ளதை கண்டறிந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் பெயரில், அந்த சிறுமியின் தாய் மாரியம்மாள் மீது குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழும், அந்த சிறுமியின் அக்காள் கணவர் தினேஷ், மணல்மேட்டை சேர்ந்த 72 வயதான ராதாகிருஷ்ணன், திருவாளப்புத்தூரை சேர்ந்த 45 வயதுடைய செந்தில்குமார், கடலங்குடி சேர்ந்த ராஜ், உள்ளிட்ட நான்கு பேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
"தினேஷை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உள்ளனர். அதன்பிறகே உண்மை நிலவரம் தெரியவரும். அந்த சிறுமியின் விவகாரத்தில் இன்னும் பல பெரும்புள்ளிகள் இருக்கின்றனர். அவர்களை காவல்துறையினர் திட்டமிட்டு மூடி மறைக்கின்றனர். அந்த பெண்ணுக்கு நடந்த சம்பவம் ஊரறிந்த விஷயம், அதனால் யார் யார் குற்றவாளிகள் என்பது எங்க கிராமத்தில் உள்ள பெரும்பான்மையானவர்களுக்கு தெரியும். உண்மையான குற்றவாளிகள் அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்கள் பொதுமக்கள்.