கும்பகோணம் அருகே முடித்திருத்தம் செய்யாததற்குக் ஆசிரியர்கள் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் விஷால் திருநாகேஸ்வரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அளவுக்கு அதிகமாக முடி வைத்துக்கொண்டு புள்ளிங்கோ ஸ்டைலில் இருந்ததால் பள்ளிக்கு வந்த மாணவர் விஷாலை ஆசிரியர்கள் முடித்திருத்தம் செய்து கொண்டு பள்ளிக்கு வருமாறு அறிவுரை கூறியுள்ளனர்.
ஆசிரியர்களின் அறிவுறுத்தலுக்கு பிறகும் முடியை நன்றாக வெட்டாமல் மாணவன் பள்ளிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. கடந்த 26ம் தேதி பள்ளிக்கு வந்த விஷாலைப் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஆனால் மாணவர் விஷால் பெற்றோரை அழைத்துவரவில்லை. இதனை கண்டிக்கும் விதமாக வகுப்பறையின் வாசலில் நிற்க வைத்துத் தண்டனை கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து மதிய உணவு இடைவேளையின் பொழுது எலி பேஸ்ட் ஒன்றை வாங்கிய மாணவன் விஷால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், இதற்குக் காரணம் பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் எனவும் கூறி வீடியோ எடுத்து வைத்து விட்டு எலி பேஸ்ட்டை சாப்பிட்டுள்ளார். அந்த வீடியோ சக வகுப்பு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதிர்ந்துபோன மாணவர்கள் இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சென்று மாணவன் விஷாலை மீட்ட தலைமையாசிரியர் சம்பத் உள்ளிட்ட ஆசிரியர்கள் அவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காகத் தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த 5 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த விஷால் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் திருநீலக்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் உயிரிழப்பு சம்பவத்தால் அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக போலீசார் அப்பகுதியில் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.