ஜெட் வேகமெடுக்கும் கரோனா பரவல் தற்போது தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் வரை வந்துவிட்டது. ஐந்து மாதங்கள் கடந்தும் தடுப்பு மருந்து இல்லாத நிலையில், தடுப்புக்கு ஊரடங்கு மட்டுமே மருந்து என்பது கூட பயனற்றுப் போய்விட்டது. ஒருபுறம் மிரட்டும் கரோனா, மறுபக்கம் வேலையின்மையால் வருமானம் பாதிப்பு. பசி, பிள்ளைகளோடு தவிக்கும் பல தட்டு மக்கள். கரோனா வைரசைக் காட்டிலும் கொடிய கிருமியான வறுமையை எதிர் கொள்ளமுடியாமல் பரிதவிப்பிலிருக்கிறார்கள்.
இந்நிலையில், மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி மக்கள் லாக்டவுணில் முடங்கியிருப்பதை வாய்ப்பாக்கிக் கொண்ட ஆன்லைன் கும்பல்கள், ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் பரிசு என்று மக்களிடம் உள்ளதையும் உருவிக் கொண்டிருக்கிறது.
இந்த டுபாக்கூர்களிடமிருந்து அதிர்ஷ்டவசமாக ஒரு சிலரே புத்திசாலித்தனமாகத் தப்பியுள்ளனர். அதில் ஒருவர்தான் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரின் சங்கர்ராஜ் என்ற ஹோட்டல் தொழிலாளி.
சங்கர்ராஜின் செல் நம்பருக்கு 4 கோடி பரிசு விழுந்துள்ளதாக ஒரு குறுந்தகவல் வந்திருக்கிறது. அதையடுத்த சில நொடிகளில் அவரது நம்பரில் தொடர்பு கொண்ட ஒரு நபர், பிரிட்டீஷ் மோட்டார் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், வாழ்த்துக்களைச் தெரிவித்தவர், இந்தப் பரிசுத் தொகையைப் பெறுவதற்காக 16 ஆயிரம் வரி செலுத்த வேண்டும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சிறிது நேரத்தில் ரிசர்வ் வங்கியிலிருந்து வரும் அழைப்பில் சொல்லுவார்கள் என்ற பிறகு லைனில் வந்த பெண் ஒருவர் அதையே வலியுறுத்தியிருக்கிறார்.
அதன்படியே தொடர்பு கொண்ட நபர் ஒருவர் 16 ஆயிரம் ஸ்டேட் வங்கிக் கணக்குக்கு அனுப்புப்படியும், அனுப்பிய பிறகு ரிசர்வ் வங்கிக்கு அதன் விபரத்தை ரிசர்வ் வங்கியின் இ மெயிலுக்கு அனுப்பவேண்டும் என்றும் கூறியவர் எப்போது செலுத்துவீர்கள் என்றும் கேட்டுள்ளார். தொடர்ச்சியாகப் போன் அழைப்பு வந்ததால் சங்கர்ராஜ் தன் வீட்டு நகையை அடகு வைத்து பணம் செலுத்தத் தயாரானவர்,ஏதோ ஒரு சந்தேகத்தில் தன் ஹோட்டல் முதலாளி கணேஷ்குமாரிடம் விசயத்தைச் சொல்ல, அவரோ ஏமாற வேண்டாம் பணம் செலுத்த வேண்டாம் என்று சொன்னதும், தன் முடிவை மாற்றிக் கொண்டார் சங்கர்ராஜ்.
விடாக் கண்டனாக இது குறித்து தொடர் போன் வர, அவர்களிடம் பேசிய கணேஷ்குமார். 4 கோடி பரிசு விழுந்திருப்பதால் வரியாக அதில் 16 ஆயிரத்தைக் கழித்துக் கொண்ட மீதிப் பணத்தைத் தாருங்கள் என்று கொடாக் கண்டனாய்ப் பதிலளித்தவரிடம், பணம் செலுத்தியே ஆகவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். வாட்ஸ் அப் நம்பர் கொடுங்கள் என்று கேட்டதற்கு மறுத்திருக்கிறது எதிர்முனை.
இந்தத் தொல்லை தாங்க முடியாமல் போன கணேஷ்குமார் இது குறித்து கோவில்பட்டி நகர ஸ்டேட் பேங்க் மேலாளரிடம் தெரிவித்ததில், அவரோ இது போன்ற நடைமுறைகள் ரிசர்வ் வங்கியில் கிடையாது. அவர்களின் நம்பர் டெல்லியிலுள்ள ஒரு பெண்ணின் கணக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிக்குப் புகார் தெரிவித்தவர்கள், சைபர் க்ரைமிலும் புகார் செய்ய உள்ளனர்.
ஆன்லைன் டூபாக்கூர் பரிசு தொடர்பான விடாக்கண்டன் கொடாக்கண்டன் விவகாரம்,நகரைப் பரபரப்பாக்கியிருக்கிறது.