கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் உள்ளது கொங்கராய பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் தீபாவளியன்று இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்தின் அருகே ஒரு பட்டாசுக் கடை இருந்துள்ளது. இளைஞர்கள் வெடித்த வெடியின் தீப்பொறி அந்த பட்டாசுக் கடையினுள் விழுந்துள்ளது.
இதனால் பட்டாசுக் கடையில் இருந்த மொத்தப் பட்டாசுகளும் வெடித்துச் சிதறியது. இதில் வெடி வாங்குவதற்காக அந்தக் கடையின் அருகே நின்று கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் தர்ஷித், பழனிவேல் என்பவரது மகள் நிவேதிதா, இவரது இன்னொரு மகள் வர்ஷா ஆகிய மூன்று குழந்தைகளுக்கும் தீ காயம் ஏற்பட்டுள்ளது. மூவரும் 7 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்.
உடனடியாக மூன்று குழந்தைகளையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அதில் தர்ஷித், நிவேதா ஆகிய இரு சிறுவர்களும் சிகிச்சை பலனின்றி ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். வர்ஷா சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று அந்தச் சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வரஞ்சரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் பட்டாசு வெடி விபத்தில் இறந்து போன சம்பவம், கொங்கராய பாளையம் கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.