ஈரோடு மாணிக்கம்பாளையம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் 42 வயதான பாலன் என்ற பாலமுருகன். விசைத் தறிபட்டறை தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. அம்மாவுடன் வசித்து வந்த பாலமுருகனுக்கு மதுப்பழக்கம் நீண்ட காலமாக இருப்பதால் தினமும் மது அருந்துவது அவரது வழக்கம். தறி ஒட்டும் அவர் ஒவ்வொரு நாள் கூலியில் பெரும் பகுதியை டாஸ்மாக் கடைக்கே கொடுத்து சரக்கு வாங்கிக் குடித்துள்ளார். அதிலும் விலை குறைவான சரக்குகள்தான் இவர் வாங்கி குடித்தது.
இந்நிலையில், நேற்று இரவு ஈரோடு சூளையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் அளவுக்கு அதிகமாக போதை ஏறிய நிலையில், மது குடித்துவிட்டு, டாஸ்மாக் கடை எதிரே உள்ள சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது, போதையால் நடக்க முடியாமல் தடுமாறி சாலையோரம் மயங்கி விழுந்துள்ளார். போதையில் கிடப்பவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, இன்று காலை அவ்வழியாகச் சென்றவர்கள் கிழே படுத்திருந்த பாலமுருகனை எழுப்ப முயன்றபோது, அவர் எழவில்லை. இதனையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஈரோடு வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, ஏற்கனவே அவர் இறந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, பிறகு அவரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பிரேதப் பரிசோதனைக்காக உடலை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 'அட ஒவ்வொரு நாளும் இந்த டாஸ்மாக் கடைக்கு வந்து குடிப்பவராச்சே இன்னைக்கு அதே டாஸ்மாக் சரக்கு அவரை குடித்துவிட்டதே' என அக்கடையின் குடிகார வாடிக்கையாளர்கள் சோகத்தில் மூழ்கி... மேலும், ஒரு கட்டிங் போட்டுவிட்டுச் சென்றதுதான் பெருங்கொடுமை...!