தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில பொதுக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பதவியேற்பு விழா இன்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தமிழக முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர். அடுத்ததாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வரை அழைத்து நடத்துவது தொடர்பாகவும், புதிததாக பொறுப்பேற்ற மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, தோழமை சங்கத் தலைவர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
இவ்விழாவிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்ததலைவர் சண்முகராஜன், “110 விதியின் கீழ் 13 அம்ச கோரிக்கைகளை அறிவித்து, அரசு அலுவலர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி நிர்ணயம் செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். நடைபெற உள்ள மாநாட்டின் மூலம் பங்களிப்பு ஊதிய திட்டம் ரத்து என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன் வைக்க உள்ளோம்” என்று கூறினார். இந்த விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.